வியாழன், 27 பிப்ரவரி, 2014

அரசியல் சந்தர்ப்பவாதத்தை எதிர்ப்போம்! நிராகரிப்போம்!




அரசியல் சந்தர்ப்பவாதத்தை
எதிர்ப்போம்! நிராகரிப்போம்!

       2014 மக்களவை தேர்தல்கள் நெருங்க நெருங்க அப்பட்டமான அரசியல் சந்தர்ப்பவாதம் அரங்குக்கு வருகிறது. ராம் விலாஸ் பாஸ்வானும் அவரது லோக் ஜனசக்தி கட்சியும் இப்போது வெளிப்படையாக மோடியுடன் ஊடாடுகிறார்கள். இந்திய நீதிக் கட்சியின் தலித் தலைவரான உதித் ராஜ் ஏற்கனவே பாஜகவில் இணைந்துவிட்டார்.

        சந்தர்ப்பவாதிகளைப்  பொறுத்தவரை, மதவாத எதிர்ப்பு, நிலவுகிற அரசியல் காற்றுக்கேற்ப அணிந்து கொள்ளும், தேவையில்லை என்றால் கழற்றிவிடும் ஒரு வசதியான அங்கியே. 2002ல் தேஜமுவை விட்டு விலகாத நிதிஷ் குமார், இப்போது பாஜகவுடனான நீண்டகாலத்திய கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு, தன்னை ‘மதச்சார்பற்றவர்’ என்று சொல்லிக்கொள்கிறார். 2002ல் குஜராத் மனிதப் படுகொலையை எதிர்த்து தேஜமுவில் இருந்து விலகிய ராம் விலாஸ், இப்போது மோடியுடன் நெருக்கம் காட்டுகிறார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் சமீபத்தில் 2002 மனிதப் படுகொலை இனிமேலும் ஒரு பிரச்சனை அல்ல என்று சொல்ல முயற்சி செய்தார். ராம் விலாசோ, பவாரோ, தங்களுக்கு வேறு தேர்வுகள் இருப்பதாகக் காட்டி காங்கிரசுடனான தங்கள் பேரத்தை உயர்த்திக் கொள்ள முனைகிறார்களோ, இல்லையோ, யதார்த்தம் என்னவென்றால், ஆளும் வர்க்கக் கட்சிகள், மதவாத எதிர்ப்பை, அவமானகரமான கோட்பாடற்ற சந்தர்ப்பவாதமாக சுருக்கிவிட்டன. இதற்கு முன்பும், ‘மதவாத எதிர்ப்பு’ தளத்தில் மட்டுமே உருவாக்கப்பட்ட அய்க்கிய முன்னணியின் தலைவரான சந்திரபாபு நாயுடு, எந்த சங்கடமும் இன்றி தேஜமுவுடன் இணைந்தார். இன்று வரலாறு நம்மை விரட்டுகிறது. ‘மூன்றாவது அணியின்’ கூட்டம் இப்போதுதான் நடந்தது; தளர்வாக இணைக்கப்பட்டுள்ள அந்தக் கூட்டணி, மதவாதத்தையும் நவதாராளவாத பொருளாதாரக் கொள்கைகளையும் எதிர்க்கும் கடப்பாடு கொண்டது என்று இககவும் இககமாவும் பிரகடனப்படுத்துகின்றன. இந்த ‘மூன்றாவது அணியில்’, சமீப காலம் வரை, பாஜகவின் கூட்டாளிகளாக அல்லது அதன் ஒரு பகுதியாக இருந்த, அய்க்கிய ஜனதா தளம், பிஜ÷ ஜனதா தளம், அஇஅதிமுக, ஜனநாயக ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா போன்ற பல கட்சிகள் உள்ளன; இந்தக் கட்சிகள் இப்போது ‘மதச்சார்பற்ற’ தோற்றம் தரப் பார்க்கின்றன. மிகவும் மோசமான மதவெறி கலவரங்களுக்கு தலைமை ஏற்று, முசாபர்நகர் மற்றும் அதன் பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த கிராமங்களில் இருந்து வறிய இசுலாமியர்களை வெளியேற்றியதன் மூலம், மதச்சார்பற்ற சக்தி என்ற தனது வேடத்தை வெளிப்படுத்திய, சமாஜ்வாதி கட்சியும் இந்த அணியில் உள்ளது. ‘மதவெறி எதிர்ப்பு’ என்ற பெயரில், பல்வேறு நிறங்களிலான சந்தர்ப்பவாத சக்திகளை ஒன்றிணைப்பது, மதவெறிக்கு எதிரான அவசியமான, அவசரமான போராட்டத்தின் நம்பகத்தன்மையை அரித்துப் போகச் செய்துவிடும். ‘மூன்றாவது அணியின்’ உறுப்பு அமைப்புக்கள் என்று அழைக்கப்படும் இந்த கட்சிகள், கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரக்  கொள்கைகளுக்கு பதிலாக வறியவர் சார்பு கொள்கைகளை கொண்டு வருவதில் எந்தக் கடப்பாடும் இல்லாதவை. உதாரணமாக, பிஜ÷ ஜனதா தளம், ஒடிஷாவில் கட்டாய நிலப்பறி மற்றும் கார்ப்பரேட் சூறையாடலுக்கு தலைமை தாங்குகிறது. இதை எதிர்க்கும் பழங்குடி மக்கள் மீது இடதுசாரி செயல்வீரர்கள் மீது ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விடுகிறது. இது போன்ற சக்திகளுடனான கூட்டணியை ‘மாற்று’ என்று முன்னிறுத்துவது, கார்ப்பரேட் சூறையாடல் மற்றும் மதவெறிக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகமாகும்.

      இதுபோன்ற சந்தர்ப்பவாதத்துக்கு அப்பால் நிற்பதாக ஆம் ஆத்மி கட்சி சொல்லிக் கொள்கிறது. ஆனால், அவர்களும் மதவெறி எதிர்ப்பை தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்ப்பாக சுருக்குகிறார்கள். சமீபத்தில் இந்திய இசுலாமிய கலாச்சார மய்யம் ஒன்றில் இசுலாமிய கல்வியாளர்கள் மற்றும் இசுலாமியர்கள் மத்தியில் பேசிய அர்விந்த் கேஜ்ரிவால், நாட்டுக்கு ஊழலை விட மிகவும் ஆபத்தானது மதவெறி என்று சொன்னார். இந்த உண்மையை இசுலாமியர்கள் மத்தியில் ஆம் ஆத்மி கட்சி ஏன் பேச வேண்டும்? மதவெறியின் ஆபத்து என்ன என்று அவர்களுக்குத் தெரியும். ஏனென்றால் மதவெறியால் மிகவும் மோசமாக பாதிக்கப்படுபவர்கள் அவர்கள்தான். மற்ற இடங்களில் அவர் மதவெறி பற்றி பேசுவதில்லை, ஊழல் பற்றி மட்டும்தான் பேசுகிறார் என்பது வியப்பு ஏற்படுத்துகிறது. ஆம் ஆத்மி கட்சி கணிசமான செல்வாக்கு கொண்ட டில்லி மற்றும் அரியானாவுக்கு மிகவும் அருகில் இருக்கிற முசாபர்நகர் மதவெறி வன்முறை பற்றி ஆம் ஆத்மி கட்சி ஏன் திட்டமிட்டு மவுனமாக இருக்கிறது?
      
   ‘அரசியல்ரீதியாக தீண்டத்தகாதவராக’ தன்னை காட்டிக்கொள்ள மோடி முயற்சி செய்யும்போது, தனது பிற்படுத்தப்பட்ட சாதி அந்தஸ்தை முன்னிறுத்தும்போது, கடந்த காலத்தில் மாயாவதி செய்ததுபோல், ராம் விலாஸ் பாஸ்வானும் உதித் ராஜøம், தலித் மக்கள் நலன்கள் பாஜகவுடன் பொருந்திப் போகக் கூடியவை என்று மெய்ப்பிக்க முனைகிறார்கள். தலித் விரோத, பெண்கள் விரோத மனுதர்மம் இந்தியாவின் அரசியல் சாசனமாக இருக்க வேண்டும் என்று சொல்கிற ஆர்எஸ்எஸ்ûஸச் சேர்ந்தவர்தான் மோடியும் பாஜகவும் என்பது உண்மை. தலித் மக்கள் மனிதக் கழிவை சுத்தம் செய்வது ‘ஆன்மீகக் கடமை’ என்று மோடி விவரித்திருக்கிறார். ஆக, பாஜக சொல்லும் ‘சமூக நல்லிணக்கத்தில்’ தலித் மக்கள் அடிமை சேவை செய்வதுதான் யதார்த்தம்.

       பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து என்ற பிரச்சனையில் அய்க்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக இடையிலான போட்டி தோற்றத்திலும் சந்தர்ப்பவாதம் பளிச்செனத் தெரிகிறது. தெலுங்கானா உருவாகியிருக்கிற பின்னணியில் சீமாந்திரா சிறப்பு மாநில அந்தஸ்து பெற்றுள்ளது. அய்க்கிய ஜனதா தளம் ஒரு முழுஅடைப்புக்கும் பாஜக ரயில் மறியலுக்கும் அழைப்பு விடுத்துள்ளன. இது, சிறப்பு அந்தஸ்து கோரும் பீகாருக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்று சொல்கின்றன. 2000ல், தேஜமு ஆட்சியில் ஜார்க்கண்ட் உருவானபோது, பாஜகவோ, அப்போது தேஜமு அமைச்சராக இருந்த நிதிஷ் குமாரோ, ஏன் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்தை உறுதி செய்யவில்லை? பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கையை இகக மாலெ எழுப்பியபோது, அதை கண்டுகொள்ளாமல் இருந்த அதே பாஜகவும் அய்க்கிய ஜனதா தளமும், இப்போது சிறப்பு அந்தஸ்தை முன்வைக்கும் சக்திகள் தாங்கள் என்று சொல்லிக் கொள்கின்றன.

   அதிகாரப் பசி கொண்ட கட்சிகளை சந்தர்ப்பவாத கூட்டணிகளில் ஒன்றிணைப்பது புரட்சிகர இடதுசாரிகளின் பாத்திரமாக இருக்க முடியாது; மதவெறி பாசிசம் மற்றும் கார்ப்பரேட் ஆதரவு ஆளுகைக்கு எதிரான உண்மையான போராட்டத்தை சக்திவாய்ந்த விதத்தில் அறுதியிடச் செய்வதுதான் புரட்சிகர இடதுசாரிகளின் பாத்திரமாக இருக்க முடியும். ஏனென்றால், அந்தப் போராட்டங்களில் இருந்துதான் எந்த உண்மையான ‘மூன்றாவது அணியும்’ உண்மையாக எழ முடியும்.